இருசக்கர வாகனத்தில் அலுவலகம் வர ஹெல்மெட் கட்டாயம் : குமரி ஆட்சியர் உத்தரவு
இருசக்கர வாகனத்தில் ஆட்சியர் அலுவலகம் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்;
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வரும் அனைவரும் இன்று முதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் உத்தரவின் பேரில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக இருந்து வருகிறது.அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் முறையாக ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளை கன்னியாகுமரி மாவட்ட போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து அறிவுரைகளையும், தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வுகளும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இன்று திடீர் சுற்றறிக்கை ஒன்றை அரசு அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார்.அந்த சுற்றறிக்கையில், தமிழக அரசு உத்தரவின்படி இருசக்கர வாகனங்களில் பயணம் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகக் இருந்து வருகிறது.இருப்பினும் அதனை செயல்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் அரசு பணியாளர்களே அதனை கடைபிடிக்காமல் ஹெல்மெட் அணிவதில் அலட்சியம் காட்டுவது பல்வேறு நிகழ்வுகளில் நேரடியாக காணமுடிகிறது.ஆகவே அனைத்து அரசுத்துறை பணியாளர்களும் இனிமேல் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது கட்டாயம் அணிய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே இருசக்கர வாகனத்தில் வரும் அனைத்து அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.இந்த உத்தரவினை மீறும் அரசு பணியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் பயணம் செய்யும் அரசு அதிகாரிகள், மற்றும் பொது மக்களை போலீசார் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாமல் உள்ளே வரும் நபர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.குமரி மாவட்ட ஆட்சியரின் இந்த திடீர் உத்தரவு, அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.