குமரியில் வெளுத்து வாங்கிய மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக கடும் வெயில் பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நாகர்கோவில், தக்கலை, ஆரல்வாய்மொழி உட்பட மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையால், வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.
மேலும் மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் பரவலாக மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2, முக்கடல் அணை உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம், தற்போது 44.79 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 969 கன அடியாக உள்ளது, இதேபோன்று 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 63 அடியாக உள்ளது இங்கு வினாடிக்கு 455 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது பெய்து வரும் மழையால் குடிநீர் தேவை நிவர்த்தி ஆவதோடு விவசாய தேவைகளும் நிறைவேறும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.