பதறவைத்த தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள்
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை வேளையில் கரை திரும்பி தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் நுழைய முயலும் போது முகத்துவார பகுதியில் குவிந்து கிடந்த மணல் மேட்டில் சிக்கி படகு கவிழ்ந்தது.
இதில் 6 மீனவர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், இனையம்புத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஆண்டனி பிரிட்டின் என்ற மீனவர் மட்டும், படகின் அடிப்பகுதியில் சிக்கி நீந்தி வர முடியாமல் உயிரிழந்தார்.
இதனையடுத்து, சக மீனவர்கள் உயிரிழந்த மீனவரை உடலை மீட்டு கரை கொண்டு வந்து, குளச்சல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று பரிசோதித்தனர். அதில் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்த சிசிடிவிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் இரண்டு படகுகள் கரை திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. ஒரு படகு மட்டும் அலையில் சிக்கி கடலுக்குள் கவிழ்ந்தது மற்றொன்று அதிர்ஷ்டவசமாக தப்பி வந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்பவர் நெஞ்சை பதற வைத்துள்ளது.