குமரியில் விவசாய பயிர்கள் சேதம் - கணக்கீடு செய்யும் பணி தொடங்கியது.
குமரியில் கனமழையால் சேதம் அடைந்த விவசாய பயிர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.;
யாஸ் புயல் தாக்கம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பி அங்கிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதாலும், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும், குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாகும், மாவட்டம் முழுவதும் சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பிலான விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மழை நின்ற பிறகே உண்மையான பாதிப்பு தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்த நிலையில் கணக்கெடுப்பை நடத்தவும் உரிய நிவாரணங்கள் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் கன மழையால் சேதமடைந்த விவசாய பயிர்கள் குறித்த கணக்கிடும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை நாகர்கோவில், புத்தேரி, தெரிசனங்கோப்பு, மருங்கூர், இறச்சகுளம், முன்சிறை நித்திரவிளை உட்பட மாவட்டம் முழுவதும் பாதிப்புகள் இருக்கும் நிலையில் இந்த பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த்துறையினர் வேளாண் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு தினங்களில் முழுமையான கணக்கெடுப்பு முடிந்தபிறகு இதுகுறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து நிவாரணங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.