ஒரே ஒரு வாட்ஸ் அப் பதிவு - நிவாரண உதவிகளை அள்ளி குவித்த தன்னார்வலர்கள்
அடிப்படை வசதிகள் கேட்டு ஒரே ஒரு வாட்ஸ் அப் பதிவு செய்ததில் நிவாரண உதவிகளை அள்ளி குவித்த தன்னார்வலர்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது நரிப்பாலம் கிராமம்.
இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் குடிநீர், உணவு இன்றி தவிப்பதாகவும். தங்கள் பகுதிக்கு அடிப்படைத் தேவைகளான காய்கறிகள் மளிகை சாதனங்கள் உள்ளிட்ட எதுவும் வராததால் ஒருவேளை உணவுக்கு வழியின்றி தவித்து வருவதாகவும் அந்த கிராமத்தை சேர்ந்த சுபலா என்ற பெண் தனது ஆதங்கத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவானது வைரலாகி இருந்த நிலையில் தற்போது அந்த கிராம மக்களுக்கு தேவையான அரிசி, மளிகை சாதனங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை சமூக ஆர்வலர்கள் தேடி சென்று வழங்கி வருகின்றனர்.
ஒருவேளை உணவுக்கு வழி இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மூன்று வேளை உணவுக்கும் தேவையான பொருட்களை தன்னார்வலர்கள் வழங்கி வருவது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நரிப்பாலம் கிராம மக்கள் தெரிவித்தனர்.