நீர்நிலைகளில் போலீஸ் கட்டுப்பாடு - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
குமரியில், நீர்நிலைகளை காவல்துறைகட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மஹாலாய அம்மாவாசையை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகள் மற்றும் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. இந்த தடை உத்தரவை தொடர்ந்து, வழக்கமாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் நடைபெறும் 16 வகை புனித தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியை போலீசார் தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
மேலும், கடற்கரைக்கு செல்லும் பகுதி முழுவதும் தடுப்பு வேலிகளால் அடைக்கப்பட்ட நிலையில், தர்ப்பணம் செய்ய வருபவர்களை மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளையும் கடற்கரை பகுதிக்கு செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக தொலைதூரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள், பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சாலையிலே நின்றவாறு கன்னியாகுமரியின் அழகை பார்த்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.