தக்கலை அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
தக்கலை அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நூதன முறையில் செயின் பறித்த திருடனை போலீசார் கைது செய்தனர்.;
தக்கலை அரசு மருத்துவமனை.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மருதூர் குறிச்சியை சேர்ந்த ஞானையன் என்பவரின் மனைவி செல்லம்மாள். மூதாட்டியான இவர் உடல்நிலை சரி இல்லாததால் மருந்து வாங்க தக்கலை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் நின்ற மர்ம நபர் ஒருவர் உதவி செய்வதாக கூறி ஒவ்வொரு மருத்துவ பிரிவுக்கும் அழைத்து சென்றுள்ளார். பின் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை கழற்றி எடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.
தங்க நகையை பறி கொடுத்த மூதாட்டி கதறியபடி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து தங்க செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.
இதனிடையே மருத்துவமனை பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் அதன் அடிப்படையில் மூதாட்டியிடம் நூதன முறையில் செயின் பறித்த குலசேகரம் பகுதியை சேர்ந்த முரளி என்பவரை கைது செய்தனர்.