தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் சேவை : அமைச்சர் தொடங்கி வைத்தார்
குமரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து தற்போது படிப்படியாக குறைந்து இன்றைய நிலவரப்படி 210 நபர்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், நோயாளிகளை அழைத்து வரவும், வீட்டிற்கு அழைத்து செல்லவும் தடுப்பூசி முகாம் பயன்பாடுகளுக்காகவும் அரசு ஆம்புலன்ஸ் வசதி போதுமானதாக இல்லை.
இந்த அசாதாரண சூழ்நிலையில் அரசிற்கு கைகொடுக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆம்புலன்ஸ் சேவையை அளித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இரணியல் பகுதியில் இயங்கும் ஷீரடி ஸ்ரீ சாயிபாபா குமரி தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.
அரசுடன் கைகோர்த்து செயல்பட உள்ள இந்த ஆம்புலன்ஸ் சேவையை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.