திற்பரப்பு அருவியில் மூன்றாவது நாளாக காட்டாற்று வெள்ளம்
தொடர் வெள்ள பெருக்கு காரணமாக, திற்பரப்பு அருவியில் மூன்றாவது நாளாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில்,கடந்த மூன்று நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு பெருமளவில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இருந்து 5892 கன அடி நீரும் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் இருந்து 4852 கன அடி நீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. கோதையாறு, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இரண்டு அணைகளில் இருந்தும் 11 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில், மூன்றாவது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, காட்டாற்று வெள்ளமாக மாறி, அருவியின் அருகில் செல்லமுடியாத அளவில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.