108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை நேரில் சந்தித்து பாராட்டிய அமைச்சர்.
பத்பநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் மனோ தங்கராஜ் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தேடி சென்று நன்றி தெரிவித்தார்.
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பத்பநாபபுரம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் மற்றும் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அங்குள்ள மருத்துவர்களிடம் மருத்துவ முறைகள் குறித்தும் தேவைப்படும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் 108 ஆம்புலன்சில் பணியாற்றும் ஊழியர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்த நிலையில் அவர்களை தேடி சென்று சந்தித்த அமைச்சர் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தன்னலம் பாராது பொதுநலத்தில் தன்னை அர்ப்பணித்து உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு அமைச்சருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.