கனமழையால் 1200 ஏக்கர் நிலபரப்பிலான விவசாயம் முற்றிலுமாக பாதிப்பு
குமரியில் கனமழையால் 1200 ஏக்கர் நிலபரப்பிலான விவசாயம் முற்றிலுமாக பாதிப்பு அடைந்து உள்ளன.;
வடகிழக்கு பருவமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
இந்த அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக மாவட்டம் முழுவதும் 14 குளங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளன. தாமிரபரணி ஆறு, பழையாறு, பரளியாறு, கோதையாறு உள்ளிட்ட ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் உருவாகி ஊருக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில் நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியில் பெரிய குளம் உடைந்து அதிலிருந்து தண்ணீர் வெளியேறியதால் புத்தேரி, இறச்சகுளம், தெரிசனங்கோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு உள்ள விவசாய பயிர்கள் முற்றிலும் பாதிப்பை சந்தித்துள்ளது. மாவட்டம் முழுவதும் காட்டாற்று வெள்ளத்தால் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்ட நெல், வாழை, தென்னை, ரப்பர் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.