2 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் உள்ளிருப்பு போராட்டம்
குமரியில், கணவர் மீது பொய் வழக்கு போட்டிருப்பதாகக்கூறி, கலெக்டர் அலுவலக வளாகத்தில், 2 குழந்தைகளுடன் பெண் தர்ணா செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் சாரதி; இவரது மனைவி பிருந்தாதேவி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சாரதி மீது, ஒருவரின் தூண்டுதலின் பெயரில் மண்டைக்காடு போலீசார், பொய் வழக்கு பதிவு செய்து இருப்பதாக இக்குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பொய் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும், பிருந்தாதேவி தனது 2 குழந்தைகளுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு வந்து, அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், வழக்குகளை வாபஸ் பெறும் வரை அங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறி, அவர் போராட்டத்தை தொடர்ந்தார். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி, போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.