புதுபிக்கப்படுமா புத்தேரி குளம்?

விவசாயமும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் பாசன குளம்.;

Update: 2021-05-09 07:30 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மாநகரின் எல்லையில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த புத்தேரி குளம். மழை காலங்களில் அணைகளில் இருந்தும் ஆறுகளில் இருந்தும் வரும் தண்ணீர் வழிநெடுகிலும் சுமார் ஐந்து குளங்களை கடந்து இந்த குளத்திற்கு வரும் நிலையில், இந்த குளத்தில் உள்ள நீரை நம்பி ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் வயல்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன.

இந்நிலையில் இந்த குளத்தின் மறுகால் தடுப்பணை மற்றும் மதகுகள் சீர் செய்யப்படாமல் உள்ளதால் பாசன நிலங்களுக்கு தண்ணீர் போவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தவிர பெருவெள்ளத்தில் தடுப்பணை அருகே உள்ள சாலை துண்டிக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதால் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல கரடுமுரடான மாற்று பாதையையே மக்கள் நம்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதேபோன்று குளம் முழுக்க ஆகாயத் தாமரைகள் படர்ந்து உள்ளதால் இதனை குளிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குளத்தின் நீரை பயன்படுத்த முடியாததால் விவசாயமும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குரியதாக உள்ளது. இந்நிலையில் இந்த குளத்தின் மறுகால் தடுப்பணையையும், மதகுகளையும் சீர்செய்து, ஆகாயத் தாமரைகளை அகற்றி பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் குலத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News