கொரோனா விதிமுறையை மீறிய கடைகள் - அபராதம் விதித்த மாநகராட்சி

Update: 2021-05-22 07:30 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா தொற்று விதிகளை மீறும் கடைகளுக்கு நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.

இதனிடையே மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் இன்று மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மற்றும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 ஹோட்டல்களில் டீ விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு ஹோட்டல்களுக்கும் தலா ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதே போன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காத இறைச்சிக் கடைக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் மோட்டார் சைக்கிளில் வைத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்பில் டீ விற்பனை செய்தவருக்கு ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கோட்டார் பகுதியில் செயல்பட்ட ஒரு பலசரக்கு கடைக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது. கடைகள் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள மாநகராட்சி தொடர் விதிமீறல்களில் ஈடுபட்டால் சீல் வைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags:    

Similar News