குமரியில் ஆதரவற்றோர்களை அவமானப்படுத்திய வடமாநில இளைஞர்கள்.
உணவு பொட்டலங்களை கைகளில் வழங்காமல் தரையில் வைத்து அவமானப்படுத்திய வடமாநில இளைஞர்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றோருக்கு உணவு வழங்க திட்டமிட்டு அதன்படி வடசேரி பேருந்து நிலையத்தில் தங்கியிருந்தவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க அவர்களை அழைத்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த ஆதரவற்றோர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் வடமாநில இளைஞர்கள் உணவு பொட்டலத்தை கைகளில் கொடுக்காமல் தரையில் வைத்து விட்டு அதனை எடுத்துச் செல்ல கூறினர்.
ஆதரவற்றோர்களும் வேறு வழியின்றி தரையில் வைத்த உணவு பொட்டலங்களை எடுத்து சென்ற நிலையை நேரில் பார்த்த நாகர்கோவில் சுகாதாரத்துறை அதிகாரி மாதவன்பிள்ளை உணவு பொட்டலங்களை தரையில் வைத்து வழங்குவது அவமதிப்பதாக உள்ளது ஆகவே கைகளில் வழங்க வேண்டும் தரையில் வைக்கக்கூடாது என்றும் உணவு கொடுப்பதை மனதார செய்ய வேண்டும் மனம் நோகும் படி கொடுக்க கூடாது என்றும் கூறினார்.
அதற்கு வடமாநில இளைஞர்கள் அவர்களுக்கு ஏதேனும் நோய் இருக்கலாம் அதனால் தான் தரையில் வைக்கிறோம் என்று தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சுகாதாரத்துறை அதிகாரியோ இது அவர்களை அவமதிக்கும் செயலாகும், எனவே கைகளில் கையுறை அணிந்து கொண்டு வழங்க வேண்டும் இல்லை என்றால் மாநகராட்சியிடம் வழங்குங்கள் நாங்கள் வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.
ஆனால் வடமாநில இளைஞர்கள் மீண்டும் அருகில் இருந்த இருக்கைகளில் உணவுப்பொட்டலங்களை கீழே வைத்து வழங்கினர். இதனால் கோபம் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரி இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து கைகளில் உணவு பொட்டலத்தை கொடுத்தால் கொடுங்கள் அல்லது உணவு வழங்க கூடாது என்று கண்டிப்பாக கூறியதை தொடர்ந்து வடமாநில இளைஞர்கள் கைகளில் உறைகளை போட்டு கொண்டு உணவு பொட்டலங்களை ஆதரவற்றோருக்கு கைகளில் வழங்கினர்.
இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பார்ப்பவர்களை முகம் சுழிக்க செய்தது.