ஆட்சியர் அலுவலகத்தில் வேரோடு சாய்ந்த மரங்கள்: அகற்றும் பணி தீவிரம்
கனமழையால் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.;
கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் தொடங்கி 30 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக, மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது. அதீத கனமழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி அணைகளில் இருந்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் குமரியில் மேற்கு மாவட்ட கிராமங்கள் வெள்ளக்காடாக மாறி உள்ளன.
இந்நிலையில், கன மழையுடன் வீசிய சூறை காற்றால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூங்காவில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயுத பூஜை, சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்கு பின்னர், நாளை அலுவலகம் செயல்பட உள்ள நிலையில், வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள், கொட்டும் மழையில் இன்று வேகமாக நடைபெற்றன.