செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிய பலே ஆசாமிகள்
குமரியில் செல்போன் வாங்குவது போல் நடித்து திருட்டில் ஈடுபட்ட திருடர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எப்போதும் மக்கள் நடமாட்டமும், போக்குவரத்தும் உள்ள மணிமேடையில் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள செல்போன் கடைக்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் மொபைல் வாங்குவது போல் கடைக்கு வந்தனர்.
பைக்கில் வந்த ஒரு வாலிபர் பைக்கில் நின்று கொண்டிருக்க மற்றொரு வாலிபர் கடையிலிருந்த மொபைல் மாடல்களை பார்த்துக் கொண்டிருந்தார். கடையில் உள்ள பெண் ஊழியர் செல்போன்களை காட்டிக்கொண்டு இருந்த போது வேறு மாடல் மொபைல் வேண்டும் என்று கூறியதால் அந்த பெண் ஊழியர் திரும்பி மொபைல் எடுப்பதற்குள் இளைஞர் ஏற்கனவே பார்த்துகொண்டிருந்த இரண்டு செல்போன்களை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் சத்தமிட்டபடி விரட்டி சென்றும் அவர்களை பிடிக்க முடியவில்லை. நிலையில் இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்போன் கடை மற்றும் அருகில் உள்ள கடைகள், அலுவலகங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடப்பட்ட செல்போனில் மதிப்பு 40 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது, இந்நிலையில் திருடர்கள் இருவரும் சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக நாகர்கோவில் பகுதிகளில் சுற்றுதிரிந்து பல மொபைல் கடைகளில் ஏறி இறங்கியதும் தெரிய வந்துள்ளது.