நாகர்கோவிலில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 72 பவுன் நகைகள் திருட்டு

நாகர்கோவிலில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 72 பவுன் நகை கொள்ளை சம்பவத்தில் வேலைக்கார பெண்கள் சிக்கினர்.

Update: 2022-04-18 03:21 GMT

நகை திருட்டு நடந்த ஓட்டல் அதிபர் வீடு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு முதல் புது தெரு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 70), இவர் நாகர்கோவிலில் பிரபல ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் வீட்டில் வைத்து இருந்த நகைகளை எடுக்க பீரோவைத் திறந்து பார்த்துள்ளார், அப்போது பீரோவில் இருந்த 72 பவுன் நகை மாயமாகி இருந்தது, இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் குடும்பத்தினர் நகையை வீடு முழுவதும் தேடினார்கள்.

ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை, இதனை தொடர்ந்து நேசமணி நகர் போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.இதையடுத்து நேசமணிநகர் போலீசார் கொள்ளை நடந்த ஓட்டல் உரிமையாளர் வீட்டிற்கு வந்து ஓட்டல் உரிமையாளர் ஆனந்தனிடம் விவரம் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர், மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதனிடையே வீட்டில் வேலை பார்த்த வேலைக்கார பெண்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் இருவரிடமும் துருவித்துருவி விசாரணை நடத்தியபோது ஆனந்தன் வீட்டில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து போலீசார் இரண்டு பெண்களையும் பிடித்து நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர், போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் அவர்கள் ஆனந்தன் வீட்டில் இருந்து நகைகளை கடந்த சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சென்றது தெரியவந்தது. நகைகளை இருவரும் பங்கு வைத்து சரிபாதியாக எடுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது, இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News