5 கிராமங்களின் குடிநீர் ஆதாரமான குளம் மாசுபட்டதால் நோய் பரவும் அபாயம்
குமரியில் 5 கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் குளம் மாசுபட்டதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.;
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் மற்றும் கிள்ளியூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 5 கிராமங்களை சேர்ந்த மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நிவர்த்தி செய்து வரும் குளமாக உள்ளது பாலூர் குளம்.
இந்த குளத்திலிருந்து பெறப்படும் தண்ணீரை பயன்படுத்தி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
முந்தைய நாட்களில் நெல் விவசாயமும் தற்போது வாழை விவசாயமும் இந்த குளத்து நீரை நம்பி உள்ள நிலையில் சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட இந்த குளம் தற்போது பலரது ஆக்ரமிப்பின் காரணமாக குறைந்து காணப்படுகிறது. மேலும் இந்த குளத்தில் இருந்து கிடைக்கும் நீரையே குடிநீராக கிள்ளியூர் பேரூராட்சி நிர்வாகம் விநியோகித்து வருகிறது.
இந்நிலையில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த இந்த பாலூர் குளம் கடந்த 25 ஆண்டுகளாக எந்த வித பராமரிப்பும் இன்றி தூர்வாரப்படாமல் இருப்பதால் குளம் விவசாய வயல்போல் காட்சி அளிக்கிறது.
மேலும் சில சமூக விரோதிகள் இறைச்சி கழிவுகள் குப்பைகள் உள்ளிட்டவற்றையும் இரவு நேரங்களில் தட்டி செல்வதால் குப்பைகள் நிறைந்து சுகாதாரமற்று காணப்படுவதோடு தண்ணீரும் மாசடைந்து காணப்படுகிறது.
இதே போன்று குடிநீர் தேவைக்காக தோண்டப்பட்ட கிணறும் குப்பைகள் மற்றும் பாசிகள் நிறைந்து காணப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் பேரூராட்சி நிர்வாகம் இந்த தண்ணியையே தற்போதும் ஊர்மக்களுக்கு குடிநீராக விநியோகித்து வருகிறது.
சுகாதாரமற்ற நீரை பருகுவதால் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டும் ஊர் மக்கள் குளம் சரிவர தூர்வாரப்படாமல் புதற்மண்டி கிடைப்பதில் சிக்கி இதுவரை 3 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்தனர்.
முந்தைய நாட்களில் மக்களின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்து வந்த குளம் தற்போது எந்த வித பராமரிப்பும் இல்லாமல் குறைகளே பிரதானமாக காணப்படுகிறது.
இதனிடையே அரசும் அரசுதுறை சார்ந்த அதிகாரிகளும் குளத்தை பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் குளத்தை தூர்வாரி ஆக்ரமிப்புகளை அகற்றி நல்ல தரமான குளமாக மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.