கனிம வளம் கொள்ளை: கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

குமரியில், கனிம வளம் கொள்ளை நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-20 10:30 GMT

கோப்பு படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில்,  யுனஸ்கோவால் பாரம்பரிய மலைத்தொடர் என்று அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெருமளவில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மலைப்பகுதிகளில்,  சட்டவிரோதமாக கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை, அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு,  சட்டவிரோதமாக அனுமதி அளித்துள்ளதாக, கனிம வளக் கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடத்தும் போராளிகள் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். இதுதொடர்பாக கனிம வளக் கொள்ளைக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வந்தது,

அது மட்டுமல்லாது,  அதிக பாரம் ஏற்றி கனிமவளம் கொண்டு செல்லும் லாரிகள், கேரளாவுக்கு தமிழக எல்லையோர சோதனைச் சாவடியை கடந்து சர்வ சாதாரணமாக சென்று வருகிறது. பல்வேறு போக்குவரத்து விதி மீறிய செயல்களுக்காக வழக்குப் பதிவு செய்யும் போலீசார், கனிமவள லாரிகளை கண்டு கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. 

சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றபோது, கொஞ்சம் குறைந்திருந்த,  அதிக பாரம் ஏற்றி செல்லும் கனிமவள லாரிகள் தற்போது மீண்டும் குமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு ஊர்வலம் நடத்தி வருகின்றன.  அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உதவியின்றி,  அவர்கள் தலையீடு இல்லாமல், சோதனைச் சாவடிகள் வழியே அதிக பாரம் ஏற்றி கனிமவளம் கொண்டு செல்லவோ மற்றும் மலைப்பகுதிகளில் பாறைகளை உடைத்து பெயர்த்து எடுக்கவும் வாய்ப்பே இல்லை என்று, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில்,  மூடப்பட்ட கல் குவாரிகள் குறித்தும் தொடர்ந்து இயங்கி வருவதாக கூறப்படும் கல்குவாரிகள் குறித்தும், குமரி மாவட்ட ஆட்சியர் இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, தற்போது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அந்த அறிக்கை உண்மையான நேர்மையான அறிக்கையாக இருக்க வேண்டுமெனில், சிறப்பு தாசில்தாரை நியமித்து கனிம வளக் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்வது சிறப்பானதாகும்.

மேலும் உயர்நீதிமன்றத்தில் கனிம வளக் கொள்ளைக்கு எதிரான மேற்படி வழக்கு, அக்டோபர் 9ஆம் தேதி பட்டியலிடப்பட உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News