கொரோனா இரண்டாம் அலை பரவலை தொடர்ந்து அதனை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தளர்வுகளுடன் முழு ஊராடங்கை அறிவித்த அரசு நாளை முதல் 7 நாட்களுக்கு தளர்வுகள் இல்லா முழு ஊராடங்கை அறிவித்து உள்ளது. மேலும் இன்று ஒருநாள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், தக்கலை, கன்னியாகுமரி, நாகர்கோவிலில் வடசேரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக சந்தை போன்ற இடங்களில் காய்கறிகள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
கொரோனா தொற்று குறித்து அச்சம் இல்லாமல் முந்தியடித்து காய்கறிகளை வாங்க பொதுமக்கள் குவிந்த நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்திய வியாபாரிகள் காய்கறிகளின் விலையை இரு மடங்காகவும் ஒருசில காய்கறிகளின் விலையை மூன்று மடங்காகவும் உயர்த்தி விற்றனர். இதனால் பாமர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், ஒரு வார காலத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்க முடியாமல் சிலர் திரும்பியும் சென்றனர்.
இதனிடையே காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்தது. ஆனால் குமரியை பொறுத்தவரை கொரோனா பயமும் தமிழக அரசின் உத்தரவும் காற்றில் பறந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.