இலவச மளிகை பொருளில் முறைகேடு: கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
இலவச மளிகை பொருட்கள் வழங்குவதில் கடை ஊழியர் முறைகேட்டில் ஈடுபட்டதால் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்.
தமிழக அரசின் கொரொனா நிவாரண தொகை 2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குமரி மாவட்டம் படந்தாலுமூடு அருகே அதங்கோடு ரேஷன் கடையில் 385 குடும்ப அட்டை பயனாளிகள் மட்டுமே உள்ளனர். இந்த கடையில் கூட்டுறவு சங்க ஊழியர் சுந்தர் ராஜ் என்பவர் மட்டுமே கணக்காளர் மற்றும் விற்பனையாளர் ஆக உள்ள நிலையில் டோக்கன் வழங்கி விட்டு முறைப்படி பொருட்கள் மற்றும் பணம் வழங்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அரசின் இலவச பொருட்களை வெளி நபருக்கும் சம்மந்தம் இல்லாத சிலருக்கும் வழங்கி முறைகேட்டில் ஈடு பட்டத்தாகவும் கூறப்படுகிறது. மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகம் மூலம் அனைத்து பொருட்களும் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது இந்த கடையில் இலவச மளிகை பொருட்கள் இல்லாமல் பணம் மட்டும் வழங்கப்பட்டது.
இதனிடையே மளிகை பொருட்கள் இன்னும் வரவில்லை பணத்தை பெற்று கொள்ளுங்கள், மளிகை பொருட்கள் வந்தால் தருகிறேன் என ரேஷன் கடை ஊழியர் சுந்தர் ராஜ் கூறியதால் பொது மக்கள் கடையை பூட்டி விட்டு அவரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து களியக்காவிளை போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர் சுந்தர் ராஜ் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் பொருட்கள் கிடைக்காத குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் உடனடியாக தருவதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.