கனமழைக்கு 150 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு: விவசாயிகள் பரிதவிப்பு
குமரியில் கனமழைக்கு, 150 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், கனமழையால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையிலிருந்து 23 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அது காட்டாற்று வெள்ளமாக உருவானது. இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு இருந்த வாழை, ரப்பர் தென்னை விவசாயம் முற்றிலும் பாதிப்பை சந்தித்துள்ளது. விவசாய நிலங்களுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்து உள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளனர்.