பள்ளி அருகே போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை - குமரி ஆட்சியர்
பள்ளியில் இருந்து 300 அடிக்குள் போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக, பள்ளிக்கூட வளாகத்தில் இருந்து 300 அடி தூரத்திற்குள் போதை பொருட்கள் விற்பனை செய்தால் , விற்பனை செய்யும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும்.
18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மது அல்லது போதை மருந்து அல்லது புகையிலை பொருட்களை உட்கொள்ள செய்தாலோ அல்லது போதை பொருட்களை விற்க, அல்லது கடத்தலுக்கு குழந்தைகளை பயன்படுத்தினாலோ, அந்நபர்கள் மீது இளைஞர் நீதிச்சட்டம் 2015 - ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு மகளிர் திட்டம் மூலம் வழங்க வேண்டும் என, ஆட்சியர் தெரிவித்துள்ளார்.