சாதனை படைக்கும் அரசு தாெடக்கப்பள்ளி: குழந்தைகளை சேர்க்க பெற்றாேர் பாேட்டி
இந்த பள்ளியில் சீட் கிடைக்காதா என ஏங்கும் அளவிற்கு சாதனை படைத்து உள்ளது அரசு தொடக்கப்பள்ளி.
சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட தனியார் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்த பள்ளியில் சீட் கிடைக்காதா என ஏங்கும் அளவிற்கு சாதனை படைத்து உள்ளது அரசு தொடக்கப்பள்ளி.
கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஒன்றியம் ஏழுதேசம் பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி தான் சாதனை பள்ளியாக திகழ்ந்து வருகிறது. LKG, UKG, முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் கட்டமைப்பு, வகுப்பு அறைகள், மின்சார வசதி, அதிநவீன கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சிறப்பாக செயல்படுத்தபட்டு உள்ளது.
மேலும் பள்ளி வளாகம் உட்பட அனைத்து மதில் சுவர்கள் மற்றும் வகுப்பறை சுவர்களில் பெருந்தலைவர்கள் படம் உலக வரைபடம், இந்திய வரைபடம், குமரி மாவட்ட வரைபடம், உட்பட பல வரைபடங்கள் அனைத்தும் மற்றும் பாடத்திற்கு தேவையான எழுத்துக்களும் கலர் ஓவியங்களாக வரைந்து வியப்பூட்டி உள்ளனர்.
இதனால் மாணவர்கள் எந்த பக்கம் திரும்பினாலும் பாட சம்பந்தமான வரைபடங்கள் அவர்களை எளிதில் கவர்ந்து விடுகிறது, அதேபோன்று தனியார் பள்ளிகளில் கற்பிப்பது போன்று ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள், கம்யூட்டர் வகுப்புகள் என அசத்தி வருகிறது.
தற்போது கொரோனா காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வரமுடியாத நிலை இருந்து வரும் நிலையில் தனியார் பள்ளிகளை போன்று ஆன்லைன் வகுப்புகளையும் திறம்பட நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை அதிகம் செலவழித்து படிக்க வைத்து வந்த பெற்றோரும் தற்போது தங்களது பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்க்க துடித்து வருகின்றனர்.
இதுவரை இந்த பள்ளியில் 588 மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர், இது மாவட்டத்தில் அதிக மாணவர்கள் சேர்க்கை கொண்ட பள்ளிகளின் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்து முதல் இடத்திற்கான இலக்கை நோக்கி செல்கிறது.