மகளிர் உரிமைத் தொகை திட்டம்; மோசடி குறித்து ஈரோடு ஆட்சியர் எச்சரிக்கை
மகளிர் உரிமைத் தொகை குறித்த தகவல்களை மோசடி நபர்கள் செல்போன்களில் கேட்கும் வாய்ப்பு உள்ளதால் யாருக்கும் கூற வேண்டாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.;

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.
மகளிர் உரிமைத் தொகை குறித்த தகவல்களை மோசடி நபர்கள் செல்போன்களில் கேட்கும் வாய்ப்பு உள்ளதால் யாருக்கும் கூற வேண்டாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொடக்க விழாவானது பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்.,15ம் தேதி நேற்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் வீட்டுவசதி நகர்புற மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தலைமையில் ஈரோடு, வேளாளர் மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிக்கான உரிமைத் தொகை அவர்களுக்கான வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரப் பெற்றதை தொடர்ந்து, ஒருசில மகளிருக்கு ஒரு முறை கடவுச்சொல் எண் கேட்டு முகம் தெரியாத மோசடி நபர்களால் தொலைபேசி அழைப்புகள் வரப் பெறுவதாக தெரியவருகிறது.
ஆதலால், மேற்படி திட்டம் தொடர்பாக ஒரு முறை கடவுச்சொல் (ஓன் டைம் பாஸ்வேர்டு) எண் அரசால் கோரப்படுவதில்லை எனவும், எனவே இதுதொடர்பாக எவறேனும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டால், எவ்வித தகவலும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி இருந்தும் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் 30 தினங்களுக்குள் மீண்டும் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு மனு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி திட்டத்தில் பயன் பெறாதவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் எந்த அடிப்படையில் அவர்களது கோரிக்கை ஏற்க இயலவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவிப்பதற்கும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு, கோபிசெட்டிபாளையம், வருவாய் கோட்ட அலுவலகம் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.