சட்டவிரோதமாக மது விற்பனை; புகார் அளிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண்..

சட்ட விரோதமாக மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக புகார் அளிக்க பிரத்யேக வாட்ஸ்அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2023-05-30 13:15 GMT

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக, மாவட்ட கலெக்டர்  தலைமையில், மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மாவட்ட மேலாளர் ஆகியோரைக் கொண்டு நடத்திட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை, டாஸ்மாக், வனத்துறை, கலால் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களிடம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது, கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனை ஈடுபடுவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இம்மாதிரி போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயங்கள் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாராந்தோறும் ஒவ்வொரு அலுவலர்களும் இப்பணியில் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். போலி மதுபானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக வரப்பெறும் புகார்கள் மீது உடனுக்குடன் சம்பந்தப்பட்ட கள அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும். சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார்கள் அளிக்க மாநில அளவில் தகவல் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மற்றும் மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு, துணை காவல் கண்காணிப்பாளர் கட்டுபாட்டில் செயல்படும் 94429 00373 என்ற அலைபேசி எண்ணிற்கு நேரடியாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். மேலும் ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக வட்ட அளவில், கோட்ட அளவில் மற்றும் மாவட்ட அளவில் வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள வரப்பாளையம், ராயபாளையம், கடத்தூர் மற்றும் நம்பியூர் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஒருவாரத்தில் அரசு மதுபானக் கடைகளில் அரசு ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து நேரம் கடந்து விற்பனை செய்தவர்கள் மீது 122 வழக்குகளும் மற்றும் பிறமாநிலங்களிலிருந்து மதுபானம் எடுத்து வந்ததற்காக 7 வழக்குகளும் என மதுவிலக்கு தொடர்பாக சுமார் 129 குற்றவாளிகள் கண்டறியப்பட்டு 129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களின் 25 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பொன்மணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், ஜெயபால், பவித்ரா (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், மாவட்ட மேலாளர் டாஸ்மாக் மோகனசுந்தரம், உதவி ஆணையர் (கலால்) சிவக்குமரன், காவல் வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News