கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது

Update: 2023-02-28 03:15 GMT

பவானிசாகர் அணை (பைல் படம்)

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் புன்செய் பாசனத்திற்கு ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. 

இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி பாசன பகுதி உழவர்கள் நிலக்கடலை, எள், சோளம் உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஜனவரி 21-ம் தேதி முதல் வரும் மே 1-ம் தேதி வரை சுற்றுகளாகத் தண்ணீர் திறக்கப்படும் எனப் பொதுப்பணித் துறையினர் அறிவித்த நிலையில், தற்போது கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி வீதம் கடந்த பிப்ரவரி.14-ம் தேதி முதல் இரண்டாம் சுற்றுக்குத் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, மூன்றாவது சுற்று தண்ணீர் பத்து நாள்கள் கழித்து திறக்கப்படும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று (பிப்.28) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:- 

நீர் மட்டம் - 94.35 அடி ,

நீர் இருப்பு - 24.53 டிஎம்சி , 

நீர் வரத்து வினாடிக்கு - 936 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர்வரத்து வினாடிக்கு 400 கன அடி) ,

நீர் வெளியேற்றம் - 1,100 கன அடி , 

அரக்கன்கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 950 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 150 கன அடி நீரும் என் மொத்தம் 1,100 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News