கீழ்பவானி வாய்க்காலில் 2ம் சுற்று பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2ம் சுற்று பாசனத்துக்கு தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை திறக்கப்பட்டது.

Update: 2024-02-04 07:30 GMT

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2ம் சுற்று பாசனத்துக்கு தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை திறக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், பவானிசாகர் அணையில் இருந்து 2ம் போக புன்செய் பாசனத்திற்கு கீழ்பவானி பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 11,500 மில்லியன் கன அடிக்கு மிகாமல் கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் மே மாதம் 1ம் தேதி வரை திறப்பு மற்றும் நிறுத்தம் முறையில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து, கீழ்பவானி பாசனத்துக்காக திறக்கப்பட்ட 1வது சுற்று தண்ணீர் கடந்த 22ம் தேதி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (பிப்.4) இன்று காலை 8 மணிக்கு கீழ்பவானி வாய்க்காலில் 2வது சுற்று தண்ணீர் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.90 அடியாகவும், அணைக்கு வினாடிக்கு 414 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மேலும், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் 700 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் என மொத்தம் 1,300 கன அடி திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News