பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: கொடிவேரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்கியதையடுத்து, அணையில் இருந்து தற்போது 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில் 105 அடி வரை நீரினைத் தேக்கி வைக்க முடியும். தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பவானிசாகர் அணையை பொறுத்தமட்டில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் 100 அடி வரையும், அக்டோபர் மாத இறுதிவரை 102 அடியிலும், நவம்பர் 1-ம் தேதி முதல் 105 அடி வரையிலும் தண்ணீர் தேக்கப்படும். அணை பாதுகாப்பு விதிகளின்படி இந்த வரையறை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. இதனையடுத்து கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் 105 அடி வரை உயர்த்த அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், எந்த நேரத்திலும் அணையின் முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று பாதுகாப்பு கருதி முன்கூட்டியே அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 104.50 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 4,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் என மொத்தம் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பவானிசாகா், சத்தியமங்கலம், கொடிவேரி, கள்ளிப்பட்டி, அத்தாணி உள்ளிட்ட பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த் துறை சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து, பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி தடுப்பணை வழியாக, நேற்று 1,100 கன அடி தண்ணீர் வெளியேறியது. அதனால், நேற்று முதல் கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் நுழையவும், குளிக்கவும் பொதுப்பணித்துறையினரால் தடை விதிக்கப்பட்டது. மேலும், பவானிசாகர் அணையில் இருந்து, 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர்ந்து இன்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.