பவானிசாகர் அணையில் 94 அடியாக குறைந்த நீர்மட்டம்
இன்று (பிப்.,26) காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 94.90 அடியாக குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அணையில் இருந்து 2-ம் போக புஞ்சை பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் மேலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 94.90 அடியாக குறைந்துள்ளது.
இன்று (பிப்.,26) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-
நீர் மட்டம் - 94.90 அடி ,
நீர் இருப்பு - 24.92 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 1,356 கன அடி ,
நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 3,300 கன அடி ,
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,200 கன அடி நீரும், அரக்கன்கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக 950 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 150 கன அடி நீரும் என் மொத்தம் 3,300 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.