பவானிசாகர் அணையில் 82 அடியை கடந்த நீர்மட்டம்

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் 82.27 அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2024-07-20 02:45 GMT

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் 82.27 அடியாக உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, நீலகிரி மலைப்பகுதியில் இருந்து பில்லூர் அணைக்கு வந்து அங்கிருந்து மேட்டுப்பாளையம் வழியாக பவானிசாகர் அணைக்கு வரும் பவானி ஆற்றிலும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹாடா வனப்பகுதி வழியாக வரும் மாயாற்றிலும் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணைக்கு நேற்று (19ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,816 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (20ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 13,161 கன அடியாக குறைந்தது. அதேபோல், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 80.32 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 82.27 அடியாக உயர்ந்தது. கடந்த ஐந்து நாளில் மட்டும் 11.34 அடி உயர்ந்துள்ளது.

அதேசமயம், அணையில் நீர் இருப்பு 15.85 டிஎம்சியிலிருந்து 16.91 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 1,200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், நடப்பாண்டு வழக்கம்போல் ஆகஸ்ட் 15ம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு அதிகரித்துள்ளதாக பாசன பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News