புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த எம்எல்ஏ

புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.;

Update: 2023-03-05 04:15 GMT

வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து தண்ணீரை திறந்த வைத்த எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 100 நாட்களுக்கு தண்ணீரை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து, வாய்க்கால் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, புதிய ஆயக்கட்டு பகுதிகளான சங்கராபாளையம், எண்ணமங்கலம், அந்தியூர் ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள வாய்க்கால்களில் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.


அதனைத்தொடர்ந்து, வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. இதில் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். திறந்த விடப்பட்ட தண்ணீர் மதகுகள் வழியே சீறிப்பாய்ந்து வெளியேறியது. அப்போது எம்எல்ஏ வெங்கடாசலம் , விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். 108 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள தண்ணீரானது இன்றிலிருந்து (மார்ச்.05) வரும் ஜூன் 12-ம் தேதி வரை மொத்தம் 100 நாட்களுக்கு திறந்து விடப்படவுள்ளது.

இதன்மூலம், வரட்டுப்பள்ளம் அணையின் புதிய ஆயக்கட்டு பகுதிகளான சங்கராபாளையம், எண்ணமங்கலம் மற்றும் மைக்கேல்பாளையம் கிராமங்களில் உள்ள 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாக 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் என மொத்தம் 6000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த தண்ணீர் திறப்பை பயன்படுத்தி விவசாயிகள் நிலக்கடலை, மக்காச்சோளம், எள் உள்ளிட்ட மானாவாரி பயிர்களை பயிரிட்டு பயனடைந்து கொள்ளுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


டைபெற்ற நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் தமிழ்பரத், பாசன விவசாய சங்க தலைவர் நாகராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் குருசாமி, சரவணன், முன்னாள் ஊராட்சி செயலாளர் கவின் பிரசாத், இளைஞர் அணி வைத்தீஸ்வரன் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News