சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் வேட்டை தடுப்புக் காவலர் உயிரிழப்பா?
சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் வேட்டை தடுப்புக் காவலர் உயிரிழந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் வேட்டை தடுப்புக் காவலர் உயிரிழந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகா தெங்குமரஹாடா அருகே உள்ள கல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 49). இவர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனச்சரகத்தில் கடந்த 18 ஆண்டுகளாக வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காட்டு யானை தாக்கி தங்கராஜ் உயிரிழந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார் தங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, தங்கராஜ் நேற்று முன்தினம் இரவு உடல்நிலை சரியில்லாமல் வீட்டிற்கு சென்றபோது, மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், நீலகிரி மாவட்டம் சோலூர் மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜ் எப்படி உயிரிழந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து விளாமுண்டி வனத்துறை அதிகாரிகள் மற்றும் பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.