ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்குத் தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் காலை 11 மணியளவில் 27.89% வாக்குப் பதிவாகியுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் காலை 11 மணியளவில் 27.89% வாக்குப் பதிவாகியுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
அந்தவகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆகியோர் வாக்களித்துள்ளனர். இதேபோல் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 9 மணி நிலவரப்படி 10.10 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 27.89 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதன்படி, ஆண் வாக்காளர்கள் 32,562 பேர், பெண் வாக்காளர்கள் 30,907 பேர் என மொத்தம் 63,469 பேர் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர்.