தாளவாடி அருகே கிராம நிர்வாக அலுவலர் மர்ம மரணம்
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு (பைல் படம்).
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் மண்கரடு பகுதியை சேர்ந்தவர் மல்லீஸ்வரன் (வயது 52). இவர், தாளவாடி தாலுகாவிற்கு உட்பட்ட பைனாபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக ஓராண்டாக பணி செய்து, கொண்டு தாளவாடியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை பணிக்கு வராததால் மற்றொரு கிராம நிர்வாக அலுவலர் வீட்டுக்கு சென்று பார்த்தார்.வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் பதில் ஏதும் வராததால் இது குறித்து தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, போலீசார் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மல்லீஸ்வரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பின்னர், சடலத்தை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து மல்லீஸ்வரன் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த மல்லீஸ்வரனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், 15 வயதில் மகள் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். வீட்டிற்குள் கிராம நிர்வாக அலுவலர் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் மல்லீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அது எந்தவிதமான பணிச்சுமை என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.