ஜி.எஸ்.டி., உணவு பாதுகாப்பு தரச்சட்டம் நாடு முழுவதும் பிரச்சினை; விக்கரமராஜா பேட்டி
ஜி.எஸ்.டி. மற்றும் உணவு பாதுகாப்பு தரச்சட்டம் நாடு முழுவதும் பிரச்சினையாக உள்ளது என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வருகிற மே மாதம் 5-ம் தேதி மாநில மாநாடு வணிகர் உரிமை மாநாடாக ஈரோடு சித்தோடு அருகே உள்ள டெக்ஸ்வேலி வளாகத்தில் நடைபெறுகிறது. இதற்காக மாநாட்டு திடல் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை பார்வையிட்ட பின்னர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோட்டில் நடைபெறும் மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சம் வணிகர்கள் தங்களது கடைகளுக்கு விடுமுறை அளித்து பங்கேற்பார்கள். 5 அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாடு, நாடு முழுவதும் எதிரொலிக்க கூடிய மாநாடாகவும், திருப்பு முனையாகவும் இருக்கும். ஜி.எஸ்.டி. மற்றும் உணவு பாதுகாப்பு தரச்சட்டம் நாடு முழுவதும் பிரச்சினையாக உள்ளது. இந்த பிரச்சினைகளை கோடிட்டு மாநாட்டில் மிக முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம். பல்வேறு பிரச்சினை மத்திய அமைச்சர்கள் பணிச்சுமை காரணமாக சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
வணிகர் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த அரசு வழங்கி உள்ளது. இறந்து போன வணிகர்களுக்கு உதவி தொகை உயர்த்தப்பட்டுள்ளது. செஸ்வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.வணிகர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் பெரும் முறையை மாற்ற இருக்கிறார்கள்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை இந்த மாநாட்டின் மூலம் முன் வைக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் டீசல் விலை 25 பைசா ஏறினால் கூட போராடுவார்கள். ஆனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காக போராட தயக்கம் காட்டுகின்றனர். எங்கள் அமைப்பு சார்பில், விலைவாசி ஏறக்கூடாது என்பதை கொள்கை முடிவாக எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.