கவுந்தப்பாடி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
பவானி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;
முகாமில் சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சி மின்னவேட்டுவம்பாளையம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை கோபி உதவி இயக்குனர் விஷ்ணுகாந்தன் தலைமை வகித்தார்.கால்நடை உதவி மருத்துவர்கள் சரவணக்குமார், யுவராஜ், திலக், வெள்ளிங்கிரி, கால்நடை ஆய்வாளர் சித்தன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கால்நடை மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு முகாமில் குடற்புழு நீக்கம், தொற்று நோய்களுக்கு தடுப்பூசி போடுதல், செயற்கை முறையில் கருவூட்டல், சினைப் பரிசோதனை, கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்தல், மலட்டு நீக்கம் சிகிச்சை, தீவனப் பயிர் மற்றும் தீவனப் புல் சாகுபடி விளக்கம், சிறு அறுவை சிகிச்சை, சிறு கண்காட்சி, மண்டல ஆராய்ச்சி மையத்தில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்துகொண்டு தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார்கள். இதனையடுத்து, முகாமில் சிறந்த கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது.