நசியனூர் அருகே கால்நடை மருத்துவ முகாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
நசியனூர் அருகே நடைபெற்ற மாபெரும் கால்நடை மருத்துவ முகாமினை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே உள்ள என்.தயிர்பாளையம் பகுதியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில், நடைபெற்ற மாபெரும் கால்நடை மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெற்றது.
பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வினீத் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இம்காமில், அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்ததாவது, கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, இன்று (27-ம் தேதி) ஈரோடு மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் கால்நடை மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் கால்நடைகளுக்கு, சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சைகள், தாது உப்புக்கலவைகள் வழங்குதல், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, சுன்டுவாத (CLP) அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள், நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக கால்நடை மருத்துவக்குழு மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், கால்நடை வல்லுநர்கள் மூலமாக கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் மற்றும் கால்நடை வளர்ப்பில் உண்டாகும் சந்தேகங்கள் குறித்தும் இம்முகாமில் எடுத்துரைக்கப்படுகின்றனர். இம்முகாமில் பங்கேற்றுள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறுமாறு தெரிவித்தார்.
முன்னதாக, பால்வளத்துறை அமைச்சர் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய்க்கான தடுப்பூசி பணியினை துவக்கி வைத்து தீவன புல் கரணை நடவு செய்தார். தொடர்ந்து, 3 விவசாயிகளுக்கு சிறந்த கால்நடை மேலாண்மை விருதுகளையும், 3 விவசாயிகளுக்கு சிறந்த கிடாரி கன்றுகளுக்கான விருதுகளையும், 1 விவசாயிக்கு விதை கரணையினையும், 1 விவசாயிக்கு ஆதார விதையினையும், 2 விவசாயிகளுக்கு தீவன மக்காச்சோளத்தினையும், 2 விவசாயிக்கு மறுகாம்பு தீவன சோள விதையினையும் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் / பொது மேலாளர் (ஆவின்) பேபி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல், துணை பொது மேலாளர் (பால்வளம்) ரவிச்சந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் பிரசிள்ளா மாலினி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.