கால்நடை உதவியாளர் பணி நேர்காணலிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் 19, 20ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

Update: 2024-02-12 15:54 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் 19, 20ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திங்கட்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- 

ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் 01.07.2015 அன்று காலியாக உள்ள 19 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு 26.04.2022 முதல் 29.04.2022 ஆகிய 4 நாட்கள் நேர்காணல் நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டு 26.04.2022 மற்றும் 27.04.2022 ஆகிய 2 நாட்களுக்கு நேர்காணல் நடைபெற்ற நிலையில் நிர்வாக காரணத்தினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது மீதமுள்ள 28.04.2022 மற்றும் 29.04.2022 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறவிருந்த நேர்காணலில் கலந்து கொள்ளவிருந்த விண்ணப்பதாரர்களுக்கும் மற்றும் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து தற்போது பெறப்பட்ட பெயர்ப் பட்டியலில் உள்ள நபர்களுக்கும் சேர்த்து நேர்காணல் தேர்வு ஈரோடு மாவட்டத்தில் 19.02.2024 மற்றும் 20.02.2024 ஆகிய 2 நாட்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், ஸ்டேட் பாங்க் ரோடு, ஈரோடு - 638 001 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்காணல் அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதனில் குறிப்பிட்டுள்ள நாளில் உரிய நேரத்தில் அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகள், மற்றும் முன்னுரிமைச் சான்றிதழுடன் நேர்காணலில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை கிடைக்கவில்லை எனில் தகுந்த ஆதாரங்களுடன் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று நேர்காணலுக்கு தகுதியுள்ளவர் எனில் நேர்காணல் அழைப்பாணை நகலை பெற்றுக்கொள்ளலாம். நேர்காணல் அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்காணல் வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0424-2257512 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News