கைபேசியை 4 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்துவது போதைக்கு சமம்: மனநல சிறப்பு மருத்துவர்
கைபேசியை 4 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்துவது போதைக்கு சமம் என்றார் கோபி நியூரோ மைண்ட் கேர் சென்டர் மனநல சிறப்பு மருத்துவர் ஆர்.ஆர்.பிரனேஷ்.
கைபேசியை 4 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்துவது போதைக்கு சமம் என்றார் கோபி நியூரோ மைண்ட் கேர் சென்டர் மனநல சிறப்பு மருத்துவர் ஆர்.ஆர்.பிரனேஷ்.
ஈரோடு மாவட்டம் கோபி பிகேஆர் மகளிர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோபி நியூரோ மைண்ட் கேர் சென்டர் மனநல சிறப்பு மருத்துவர் ஆர்.ஆர்.பிரனேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தம் உரையில், போதைப் பொருள் பயன்பாட்டினால் வரும் தீமைகள் மற்றும் பக்கவிளைவுகள் குறித்து எடுத்துரைத்தார். போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களை தக்க மருத்துவத்தின் மூலமாக அவர்களை அதிலிருந்து விடுவிக்க முடியும். தகுந்த ஆலோசனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
மேலும், கைபேசியை 4 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தினாலும் அதுவும் போதைக்கு அடிமையானது போலதான். எனவே கைபேசியை நீண்ட நேரம் பயன்படுத்தாதீர்கள் என்றும் அவ்வாறு கைபேசியிடம் அடிமையாகியிருந்தால் அதிலிருந்து விடுபடுவதற்காக வழிமுறைகளையும் அவர் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களுக்குரிய வினாக்களை சிறப்பு விருந்தினரிடம் கேட்டு அதற்கு தீர்வினைப் பெற்றுக்கொண்டனர். இதில் கல்லூரியின் தாளாளர் செயலர் பி.என்.வெங்கடாச்சலம், துணை முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவி கீர்த்திரோஷினி வரவேற்புரை வழங்க, நிறைவாக பவதாரணி நன்றி கூறினார்.