திடீரென தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்: பவானியில் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் பவானி ஸ்டேட் பாங்க் அருகில் கல்லூரி மாணவனின் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரப்ப்பு ஏற்பட்டது.;
தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவர் அசோக் கண்ணன் மகன் திருமலைராஜா (வயது 22). இவர், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஆசிரியர் காலனியில் தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எம்சிஏ முதலமாண்டு படித்து வருகிறார். இவர், பவானி - ஈரோடு ரோட்டில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பிரியாணி கடைக்கு சாப்பிடுவதற்கு, விலையுயர்ந்த பைக்கில் வந்துள்ளார். இவர், கடைக்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் பைக் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திருமலைராயன், தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. பைக்கில் பெட்ரோல் டேங்கில் அதிகளவில் பெட்ரோல் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. பவானி தீயணைப்புப் படையினர் தகவல் தெரிவித்தபோது, அவர்கள் கவுந்தப்பாடி அருகே உள்ள சேவாக்கவுண்டனூர் பகுதியில் தீயணைப்பு பணிக்குச் சென்றது தெரியவந்தது.
இதனால், அருகாமையில் உள்ள வங்கி மற்றும் பெட்ரோல் பங்குகளில் உள்ள தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு பைக்கில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. பின்னர், தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் பைக் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.