கோபி அருகே வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேர் கைது
கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் குண்டேரிப்பள்ளம் அணை அருகே உள்ள புலிகள் காப்ப வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையை ஒட்டி உள்ள புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மான், யானை சிறுத்தை போன்ற வனவிலங்குகள் உள்ளன. இப்பகுதியில் சிலர் துப்பாக்கியுடன் இருப்பதாக டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, வனசரகர் கணேஷ்பாண்டியன் தலைமையில், வனவர் ரகு, வனக்காப்பாளர்கள் செல்வக்குமார், அருண், வனக்காவலர்கள் துளசிராமன், சேர்மதுரை ஆகியோர் அடங்கிய வேட்டை தடுப்பு குழுவினர் குண்டேரிப்பள்ளம் அணை அருகே உள்ள வனப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வனப்பகுதியில் 2 பேர் துப்பாக்கியுடன் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், கொங்கர்பாளையத்தை சேர்ந்த சங்கர் மற்றும் வினோபா நகரை சேர்ந்த குமார் என்பதும், இவர்கள் 2 பேரும் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி, தோட்டா மற்றும் கத்தி போன்றவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.