விமானத்தில் பறந்த பர்கூர் அரசு பள்ளி பழங்குடியின மாணவ, மாணவிகள்

பர்கூர் மலைப்பகுதி அரசு பள்ளிகளில் பயிலும் பழங்குடியின மாணவ, மாணவிகள் விமான மூலம் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.;

Update: 2024-03-31 13:42 GMT

கோவை விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்ட பழங்குடியின பள்ளி மாணவ, மாணவிகள்.

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி அரசு பள்ளிகளில் பயிலும் பழங்குடியின மாணவ, மாணவிகள் விமான மூலம் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி ஊராட்சிக்கு உள்பட்ட சோளக்கனை, குட்டையூர், தாமரைக்கரை, பர்கூர், எப்பதாம்பாளையம், மடம் மற்றும் கிணற்றடி சோழகா உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அரசு பள்ளிகளில் மலைவாழ் பழங்குடியின மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.


இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், கூடுதல் மதிப்பெண்கள் பெறவும், சேர்க்கையை ஊக்கப்படுத்தவும், தொடர்ந்து பள்ளிக்கு வருகை தருதல், அறிவியல் சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுதல் ஆகியவற்றை மையமாக வைத்து விமானம் மூலம் சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 22 பழங்குடியின மாணவ, மாணவிகள் சுற்றுலா வாகனம் மூலம் கோவை விமான நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், அங்கிருந்து விமான மூலம் சென்னை சென்றனர். மாணவ, மாணவர்களுடன் ஒரு ஆசிரியர் மற்றும் மூன்று ஆசிரியைகளுடன், பர்கூர் ஊராட்சி மன்ற தலைவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மலையன் சென்றிருந்தார்.

சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு மெட்ரோ ரயில் அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஈக்காடு தாங்கல் வரை மெட்ரோ ரயிலில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து, ஒலிம்பியா என்னும் தனியார் பெரு நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள நிர்வாக நடைமுறைகள் மற்றும் பணி செயல்பாடுகளை மாணவர்கள் கேட்டு பார்த்து கண்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து, சென்னை பகுதியில் அவர்களுக்கான ஒரு குளிரூட்டப்பட்ட வால்வோ பேருந்து ஏற்பாடு செய்து பிளானடோரியம் (கோளரங்கம்) அருங்காட்சியகம், மவுண்ட் செயிண்ட் தாமஸ், மெரினா கடற்கரை உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தனர். மூன்று நட்சத்திர உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  இடையிடையே தரமான சிற்றுணவுகள், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பதார்த்தங்கள் வழங்கப்பட்டது.

அதன்பிறகு, சென்னையில் இருந்து படுக்கை வசதியுடன் குளிரூட்டப்பட்ட ரயில் மூலம் ஈரோடு வந்தனர். பின்னர், ஈரோட்டில் இருந்து வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு பாதுகாப்பாக அவரவர் பள்ளிகளுக்கு மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று விடப்பட்டனர். இந்த சுற்றுலாவிற்கு ஆகும் மொத்த செலவையும் ஈரோடு யான் அறக்கட்டளை ஏற்று செயல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News