சாதி சான்றிதழ் வழங்க கோரி ஈரோடு ஆட்சியரிடம் பழங்குடியின பள்ளி மாணவர்கள் மனு

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் பழங்குடியின பள்ளி மாணவ, மாணவிகள் திரண்டு வந்து மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-24 08:15 GMT

பர்கூர் மலை கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கிட கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க திரண்டு வந்த பள்ளி மாணவர்களை படத்தில் காணலாம்.

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் பழங்குடியின பள்ளி மாணவ, மாணவிகள் திரண்டு வந்து மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 3,57,980 மலையாளி இன மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா பர்கூர் மலைப்பகுதி மற்றும் சத்தியமங்கலம் தாலுக்கா கடம்பூர் மலைப்பகுதியில் 31,200 மலையாள இன மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 1976ம் ஆண்டு அரசு ஆணைப்படி வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்ற மலையாளி மக்கள் பழங்குடியினர் இனத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை மற்றும் கடம்பூர் மலையில் வாழ்கின்ற மலையாளி மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருக்கிறார்கள்.

இது தொடர்பாக கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதி மலையாள மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வேண்டி பலமுறை அப்பகுதி மக்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படாமால் உள்ளது. இதனால் மலையாளி மக்களுக்கு பழங்குடியினர் எனச் சான்றிதழ் இல்லாததால் மாணவர்கள் கல்வி பயில்வதிலும் வேலைவாய்ப்பு பெறுவதிலும் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட கடம்பூர் பகுதி மலைவாழ் மலையாளி மக்கள் தங்களது பள்ளி குழந்தைகளுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

Tags:    

Similar News