பொங்கல் தொடர் விடுமுறை: கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக, கொடிவேரி அணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக, கொடிவேரி அணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலமாக கோபியை அடுத்த கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர், இந்த தடுப்பணையில் தேக்கப்பட்டு, பாசன வாய்க்கால்களுக்கு செல்கிறது. இந்த தடுப்பணையில் தேங்கும் நீர் வழிந்து அருவி போல் கொட்டுவதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இதில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் வருகின்றனர். விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடிவேரி அணையில் குவிந்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொடிவேரி அணையில் குளிக்க பெரும்பாலான தினங்களில் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. தற்போது, பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நேற்று காலை முதலே கொடிவேரி அணையில் குவியத் தொடங்கினர்.
பவானிசாகர் அணையில் இருந்து குறைந்த அளவே நீர் திறக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளித்தனர். தடுப்பணைப் பகுதியில் உள்ள மணலில் அமர்ந்து மீன்களை ருசித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் பயணிகள் மகிழ்ந்தனர்.
கொடிவேரி அணைக்குச் செல்லும் பாதையில் ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார்கள் சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடத்தூர் மற்றும் பங்களாபுதூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.