சத்தியமங்கலம் அருகே வனவிலங்குகளின் நகங்கள், பற்களை விற்க வைத்திருந்த மூவர் கைது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலி, சிறுத்தையின் நகங்கள், வனவிலங்குகளின் பற்களை விற்பனைக்கு வைத்திருந்த மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சத்தியமங்கலம் அருகே புலி, சிறுத்தையின் நகங்கள், வனவிலங்குகளின் பற்களை விற்பனைக்கு வைத்திருந்த மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே புலி, சிறுத்தையின் நகங்கள் மற்றும் வனவிலங்குகளின் பற்கள் வைத்திருப்பதாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பேருந்து நிலையம் அருகே கோவை சாலையில் உள்ள காலி இடத்தில் நான்கு பேர் கும்பலாக உட்கார்ந்திருந்தனர். உடனே வனத்துறையினரை அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கடம்பூர் மல்லியம்மன்துர்க்கம் மலைக் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி (வயது 34), சேலம் மாவட்டம் கண்ணாமூச்சியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 36), கொளத்தூர் உக்கம்பருத்திகாட்டைச் சேர்ந்த சேர்ந்த தமிழரசன் (வயது 36), கடம்பூர் பெரியசாலட்டியை சேர்ந்த வேலுமணி என்பதும், நான்கு பேரும் சேர்ந்து புலி, சிறுத்தை ஆகியவற்றின் 14 நகங்கள் மற்றும் வனவிலங்குகளின் 2 பற்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
இதில், வேலுமணி தப்பி ஓடிய நிலையில், மற்ற மூவரையும் வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 14 நகங்கள், 2 பற்கள், 3 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய வேலுமணியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.