தாளவாடி பகுதி சுகாதார நிலையங்களில் 16 மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை
தாளவாடி பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காலதாமதமின்றி 16 மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
தாளவாடி பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காலதாமதமின்றி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தாளவாடி ஒன்றியப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. ஒன்றிய தலைவராக மகேந்திரவர்மன், ஒன்றிய துணை தலைவராக கோவிந்த், ஒன்றிய செயலாளராக சக்தியராஜ், ஒன்றிய துணைச் செயலாளராக சித்தன், ஒன்றிய பொருளாளராக ராஜப்பாஜி தேர்வு செய்யப்பட்டனர்.
பேரவைக் கூட்டத்தில் இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சுரேந்தர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.மோகன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க செயலாளர் காளசாமி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க தலைவர் ரகு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தாளவாடி பகுதியில் பைணபுரம், சூசைபுரம், தாளவாடி, ஒங்கல்வாடி, கேர்மாளம் ஆகிய ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குமாக சேர்த்து 16 மருத்துவர்கள் பணி அமர்த்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார்.
இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்வதோடு,பள்ளிக் குழந்தைகளுக்கான சுகாதார வாகனம்,நடமாடும் மருத்துவ உதவி வாகனம் ஆகியவற்றிலும் பணிபுரிய வேண்டும். இப்போது ஒட்டு மொத்தமாக தாளவாடி வட்டாரத்தின் மருத்துவ மற்றும் சுகாதாரப் பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன.
பின்தங்கிய மற்றும் மருத்துவ சேவைகளை எளிதில் பெற முடியாத தொலைதூர-வனப்பகுதியில் உள்ள தாளவாடி மக்களுக்கு ஓரளவாவது நிவாரணம் அளித்து வந்தது இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான். தற்போது இவையும் மருத்துவர்கள் இல்லாததால் முடங்கி இருப்பதால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே, தமிழ்நாடு அரசின் நோய் தடுப்பு மற்றும் பொது சுகாதாரத் துறை, உடனடியாக தாளவாடி மலைப் பகுதிக்கு போதுமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடப்பட்டது.