பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,649 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1,649 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2023-02-05 04:00 GMT

பவானிசாகர் அணை (பைல் படம்).

தமிழ்நாட்டின் 2-வது பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி. அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றின் வழியாக தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் அதிக அளவு குறைந்து வருகிறது. இந்நிலையில் அணையிலிருந்து இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று (பிப்.4) காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 731 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று (பிப்.5) காலை நிலவரப்படி அணைக்கு வரும் நீர்வரத்து 1,649 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 98.70 அடியாகவும் , நீர் இருப்பு 27.72 டிஎம்சியாகவும் , நீர் வரத்து 1,649 கன அடியாக உள்ளது. கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1,000 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றில் 150 கன அடி என மொத்தம் 1,650  கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News