ஈரோடு அரசு மருத்துவமனையில் தொடரும் வீல்சேர் பிரச்னை: அலைக்கழிக்கப்படும் நோயாளிகள்

Erode news- ஈரோடு அரசு மருத்துவமனையில் தொடரும் வீல்சேர் பிரச்னையில், சூப்பிரண்டின் சிறப்பு அனுமதியுடன் 5 ரூபாய் கூலிக்காக வீல்சேர்களை தள்ளுவதற்கு வெளியாட்களை அனுமதிக்கும் அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-01 16:00 GMT

Erode news- ஈரோடு அரசு மருத்துவமனையில் நோயாளி குமுதாவை அவரது மகன் கதிர்வேல் வீல்சேரில் தள்ளிக்கொண்டு வரும் காட்சி. அடுத்த படம்:- மருத்துவமனை சூப்பிரண்டின் சிறப்பு அனுமதியுடன் கூலிக்காக வீல்சேர் தள்ளும் வெளிநபரைப் படத்தில் காணலாம்.

Erode news, Erode news today- ஈரோடு அரசு மருத்துவமனையில் தொடரும் வீல்சேர் பிரச்னையில், சூப்பிரண்டின் சிறப்பு அனுமதியுடன் 5 ரூபாய் கூலிக்காக வீல்சேர்களை தள்ளுவதற்கு வெளியாட்களை அனுமதிக்கும் அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு பெரியவலசு பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சொர்ணம் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்பொழுது, அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர் மூதாட்டி சொர்ணத்தை  எக்ஸ்ரே எடுத்து வருமாறு கூறியுள்ளார். 


தொடர்ந்து, மூதாட்டி சொர்ணத்தை அழைத்துச் செல்ல வீல்சேர் (சக்கர நாற்காலி) மற்றும் ஸ்ட்ரெச்சர் (தூக்கு படுக்கை) வழங்கப்படாததை தொடர்ந்து அவரது மகள் வளர்மதி மூதாட்டி சொர்ணத்தை தூக்கிக்கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் காட்சிகள் வெளியாகி வைரலானது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அம்பிகா சண்முகம், மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் உறைவிட மருத்துவ அலுவலர் ஆகியோருக்கு மெமோ வழங்கினார். இதனையடுத்து, விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் இது போன்ற தவறுகள் இனி நடக்காமல் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மீண்டும் இதே போன்ற ஒரு சர்ச்சை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தறிப்பட்டறை தொழிலாளி கதிர்வேல் என்பவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு 60 வயதான அவரது தாய் குமுதாவை, கால் புண் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்.

அப்போது, தாய் குமுதாவிற்கு சர்க்கரை அதிகமாக இருந்ததால், அவரது கால்புண்ணை சிகிச்சை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று (1ம் தேதி) ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்து சென்று க்ளீனிங் செய்ய திட்டமிட்ட நிலையில், குமுதாவை அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வீல்சேரில் அழைத்து செல்லக்கோரி மருத்துவமனை ஊழியர்களிடம் நீண்ட நேரம் போராடியும், அவர்கள் யாரும் முன்வராததால், குமுதாவின் மகன் கதிர்வேல் தனியாக தாயை வீல்சேரில் அமர வைத்து சிரமமப்பட்டு அழைத்து சென்றுள்ளார்.

இதேபோல, சர்க்கரை நோயால் தாயின் உடலில் உள்ள வேறு ஏதேனும் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறிய ஸ்கேனிங் சென்டருக்கு அழைத்து செல்வதிலும், இதே சிரமநிலை ஏற்பட்டதாக கதிர்வேல் தெரிவித்தார். இதனிடையே மருத்துவமனைக்கு தொடர்பில்லாத நபர் ஒருவர் நோயாளிகளை வீல்சேரில் வைத்து அழைத்து வந்துள்ளார்.

இதுகுறித்து கேட்டபோது, அவர் மருத்துவமனையில் நியமிக்கப்பட்ட ஊழியர் இல்லை என்பது தெரிய வந்ததோடு, நோயாளிகளிடம் இருந்து 5 முதல் 20 ரூபாய் வரை பெற்றுக்கொண்டு அவர்களை வீல்சேரில் அழைத்து சென்று வருவதாக கூறிய அவர், இந்த பணியை சூப்பிரண்டின் அனுமதியுடன் தான் செய்து வருகிறேன் என இறுதியாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனை வளாகத்தில் பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனை திறக்கப்பட்டு, உயர் சிகிச்சை அளிக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், இதுபோன்ற அவல நிலைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் அரசு மருத்துவமனைகள் மீது ஏழை எளிய மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

Tags:    

Similar News